உலக தந்தையர் தினம் (World Father’s Day)

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறுபகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடையச் செய்கிறது.

நல்ல தந்தையாக மாறுங்கள்

தந்தையைப் பற்றி நாம் உணரும் போது தந்தை நம்முடன் இருக்க மாட்டார், நாம் தந்தையாகும் போது தான் நம் தந்தையைப் பற்றி அறிகிறோம் ,அதுவும் நம் தந்தையரோடு பழகியவர்கள் மூலம்தான் நாம் அவர்களுடைய பல நல்ல தகவல்களை தெரிய,அறிய முடிகிறது ,தந்தைக்கு நிகர் தந்தைதான்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானாலும் தந்தையின் ஆலோசனைக்கும், அறிவுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிலையில்தான் இருப்பார்கள். பள்ளிப் படிப்பை தொடர்வதாகட்டும், புதிய வேலையில் சேருவதாகட்டும், திருமணமாகட்டும் ,குழந்தைகள் வளர்ந்து திருமணம் செய்து தங்களுடைய சொந்த குடும்பத்தை உருவாக்கும் வரையில் தந்தையின் பங்கு மிகவும் அவசியமானது. எனவே, நீங்கள் நல்ல தந்தையாக மாறுங்கள்.


தந்தைக்கு எந்தளவுக்கு மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள். எவன் ஒருவன் தன் தந்தையின் பக்கம் வெறுப்பான பார்வையைச் செலுத்துவானோ அவன் பெற்றோருக்கு அடி பணிந்தவனாக மாட்டான்.

நமது நன்மைக்காக போராடுபவர்கள் நம் தாய்,தந்தையர் ,ஆகவே,அவர்கள் மறதியிலும் மதிக்க வேண்டியவர்கள் .

குழந்தைகளுக்கு
சந்தோஷத்தைப் பரிசளியுங்கள்.
நிறைய புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள்.
பல அனுபவங்களைக் கிடைக்கச் செய்யுங்கள்.
உலகின் நீள அகலங்களைப் புரிய வையுங்கள்.

தந்தை என்னும் அற்புத உறவு:

குழந்தை எதிர்கொள்ளும் முதல் ஆண் அப்பாதான். அப்பாவின் பாதுகாப்பு தரும் நன்மை, தூண்டுதல் தரும் நடவடிக்கை இரண்டும் குழந்தை வளரத் தேவைப்படுகிறது. பிறரின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுவது, மற்றவர்களுடன் பேசும் லாவகம், தலைமைப் பொறுப்பு ஏற்பது போன்ற திறமைகளை குழந்தையிடம் வளர்ப்பது தந்தையால் மட்டுமே முடியும். வெளி உலகை அறிமுகப்படுத்துபவர் தந்தையே! விளையாடுவதற்கு, தந்தையின் அருகாமையைத் தான் குழந்தைகள் விரும்புகிறார்கள். நீங்கள் கொடுக்கும் வெகுமதிகளை விட, உங்களுடன் சேர்ந்து இருப்பதைத் தான் குழந்தைகள் விரும்புகின்றனர்.

அப்பாக்களே! பிள்ளைகளுக்காகக் கொஞ்ச நேரம்…

குழந்தைகளுக்கு அப்பாவின் உருவமே அரணாக, உந்து சக்தியாக இருக்கிறது. உங்கள் எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், நீங்கள் உங்கள் குழந்தையுடன் பரிமாற்றம் செய்து கொள்ளுதல், புத்திசாலியான குழந்தையை உருவாக்க உதவுகிறது. தொடுதல், புன்னகை, அன்பான வார்த்தை, மனமார்ந்த பாராட்டு ஆகியவைகள் குழந்தையின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வதன் மூலம் பொறுப்புணர்ச்சியை உருவாக்குங்கள். நேர்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய குணங்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுங்கள். குழந்தைகளின் செயல்கள், சிந்தனைகளில் உள்ள நல்லதைப் பாராட்டி ஊக்கப்படுத்தவும், தவறானதைச் செய்யும் போது கண்டித்துத் திருத்தவும் வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஒழுங்கைக் கற்றுத் தரமுடியும். ஆதிக்கம் செலுத்தாத, குறுக்கீடுகள் செய்யாத தந்தை, குழந்தை வெற்றிகரமாக இலக்கை அடைய உதவுகிறார்.

நல்ல அப்பாவாக இருப்பது எப்படி?

1. உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
உங்கள் மனைவி மீது நீங்கள் கொண்டிருக்கும் நேசம், மறைமுகமாக உங்கள் குழந்தையை அடைகிறது. பரஸ்பரம் புரிதலும், மனம் ஒத்தலும் உடைய பெற்றோர் குழந்தைகள் மனதிற்கு இனிமையானவர்கள்.

2. குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்குங்கள்
நீங்கள் நிறைய பொறுப்பு உள்ளவர்தான். ஆனால் குழந்தையைப் புறக்கணித்து அதை நிறைவேற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களிடமிருந்து அன்பையும், நேரத்தையும் பெற அவர்கள் விரும்புகிறார்கள். தந்தையின் நேரடிக் கண்காணிப்பு இல்லாத குழந்தை கல்வியில் பின் தங்கியவராக இருப்பர்.

3.குழந்தைகள் என்ன சொல்கிறார்களென காது கொடுத்துக் கேளுங்கள்.

4. வெற்றி பெரியதோ, சிறியதோ முழு மனத்துடன் பாராட்டுங்கள். தந்தையின் உற்சாகமான வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமையுண்டு.

5. நல்ல அப்பா நிறைவேற்ற முடியாத வாக்குறுதியைக் கொடுக்க மாட்டார். நம்பிக்கையான அப்பா, வாக்குறுதி கொடுக்காத காரியத்தையும் செய்து தருவார். குழந்தையின் அன்றாட வாழ்வில் உற்சாகமான ஈடுபாடு ஒரு நல்ல தந்தையின் அடையாளம்.

6. திறந்த மனம், வளைந்து கொடுக்கும் தன்மையும் உள்ள தந்தையாக இருங்கள். உங்களால் மட்டுமே பிரச்சினைகளுக்குச் சுமுகமான தீர்வு காண முடியும்.

7. சின்னஞ்சிறு செயல்களின் மூலம் உங்கள் குழந்தையை பிரத்யேகமானவர் என்று உணர வைக்க முடியும். சான்று: படுக்கை நேரத்தில் சொல்லப் படும் கதைகள். இவைகளை அவர்கள் மறப்பதில்லை. வாழ்நாள் முழுவதும் தந்தை கொடுத்த இணக்கத்தையும் அன்பையும் ஞாபகத்தில் வைப்பர்.

வேலைக்குப் போகும் அம்மா, அப்பாக்களுக்கு…

அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போகும் சூழலில் வளரும் குழந்தைகளுக்குப் பிரச்சினைகள் என்ன? அதற்கான தீர்வு என்ன?

உங்கள் வேலையைப் பற்றி விவாதியுங்கள்:

வேலையின் தன்மை என்ன, வேலை செய்யுமிடம் எப்படியிருக்கும் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். இல்லையெனில் தினமும் நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பதே அவர்களுக்குப் புரிவதில்லை.
வேலை நேரத்தில் மட்டும் வேலை செய்யலாமே…

நல்ல பெற்றோராக இருப்பதை விட வாழ்க்கையில் வெற்றியாளராக இருக்க விரும்புபவர்கள் அலுவலக வேலையை நேரம் காலமின்றி செய்வதுடன், வீட்டிலும் சுமந்து வந்து செய்வது வழக்கம். தத்தம் புத்திசாலித்தனத்துக்கு கிடைக்கும் பாராட்டிற்காக கடின உழைப்பில் ஈடுபடுபவர்கள் குழந்தைகளின் மனநிலையை உணரத் தவறி விடுகிறார்கள். ஆதங்கமும், புறக்கணிக்கப் படுவதான ஆத்திரமும் அக்குழந்தைகளிடம் எதிர்விளைவுகளை விதைத்து விடுகின்றன. பலமணி நேரம் கழித்துப் பார்க்கும் தம் பெற்றோர் தம்மிடம் கவனமாகி தான் சொல்வதைக் காது கொடுத்து கேட்க வேண்டுமென்ற நியாயமான ஆசையை புறந்தள்ளாதீர்கள்.

பணியிட மன அவஸ்தைகளை வீட்டிற்கு வெளியே காலணிகளோடு கழற்றி விடுங்கள்:

வேலையிடத்தில் நடந்த பிரச்சினைகளை வீட்டிற்குள் கொண்டு வராதீர்கள். அந்தக் கசப்பு உணர்ச்சிகளுடன் குழந்தையைக் காயாதீர்கள். உங்களைப் போலவே அவர்களும் இன்று பிரச்சினைகளைச் சந்தித்து விட்டு வந்திருக்கலாம். அதைப் பற்றி உங்களுடன் பேச ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கலாம். எதிர்பார்த்தபடி உங்கள் ஆதரவான வழிகாட்டல் இல்லையெனில், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக அவர்கள் உணர்கிறார்கள். எனவே, பணிச்சோர்வு நீங்க சில நிமிடங்கள் ஓய்வோடு உற்சாகமான பெற்றோராக மாறுங்கள். குழந்தையின் தோழமையைக் கொண்டாடி வீட்டை சந்தோஷமாக்குவது உங்கள் கையில்.

உங்கள் இருதயம் மென்மையானதாக இருக்கட்டும்;
உங்கள் அணைப்பு ஆறுதல் அளிப்பதாக இருக்கட்டும்;
உங்கள் சுபாவம் சோர்வடையாததாக இருக்கட்டும்!

PC: Art of chai