பெண்கள் தின ஸ்பெஷல்..!

மார்ச் 8ஆம் தேதி மட்டும் கொண்டாட வேண்டியவர்கள் இல்லை பெண்கள், வருடம் முழுவதும் கொண்டாட வேண்டியவர்கள். இன்று ஆண்கள் இந்தியா முழுவதும், ஏன் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்துக் கொண்டு இருக்கிறார்கள், 24 மணிநேரமும் உழைக்கிறார்கள் என்று கூறுவதிற்குப் பின்னால் நம் வீட்டில் தாயின் வடிவிலோ, மனைவியின் வடிவிலோ, சகோதரியின் வடிவிலோ ஒரு பெண் இருக்கிறாள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்நிலையில், பெண்களை தெய்வமாகப் போற்றக்கூடிய இந்தியாவிலேயே அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு இன்றளவிலும் இல்லை என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. இந்த நிலையைக் கூடிய விரைவில் மாற நாம் அனைவரும் ஒன்றுகூடிச் செயல்படுவோம்.

உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும் இன்றைய நாளில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் தமிழ் இணைய செய்தி(Timestamp News) மகிழ்ச்சியடைகின்றது.

மகளிர் தின வரலாறு..

தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 106 ஆண்டுகள் முடிந்து விட்டன. பிரெஞ்சு புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன. அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர். பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் வெற்றியாய் உதித்ததே சர்வதேச பெண்கள் தினம். 1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

பாரதம் போற்றும் பெண்ணியம்…

வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாகச் சொல்வார்கள். பலவித மனம் மற்றும் பல வித பூக்களால் தொடுக்கப்பட்ட கதம்பமாலையாக பாரதம் உள்ளது. பாரதத்தில் மங்கையரும் பல விதமான மலர்களே. அவைகள் பூத்துக் காயாகி கனியாகிப் பக்குவமடைகிறது. அந்த கதம்ப மாலையை இணைக்கும் நூலாக தியாகம் உள்ளது. தியாகமே பாரதத்தில் பெண்கள் பலவித முறைகளில் ஆடை ஆபரணங்கள் அணிந்தாலும்,பல மொழிகளில் பேசினாலும் ஆதாரச் சுருதியாக ஒலிக்கும் நாதம் தியாகம் ஒன்றுதான்.

பெண்களின் இன்றைய நிலை…

பெண்களின் நிலையும் இந்தியாவில் முரண்பாடுகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருக்கும். இன்னொரு புறத்தில் ஏதோ ஒரு வெளிநாட்டில் இந்திய பெண்கள் வெற்றிக்கனி பறித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் பிரதமர், ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்பட சொல்லிக் கொண்டாலும் பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பசுமையானதாக இல்லை. பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்தின் தீ நாக்குகளுக்குப் பயந்து கொண்டு தங்கள் துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து மன அமைதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களும், நீதி மன்றங்களும் வாய்மூடி மௌனம் காப்பார்கள். இந்த நிலைமை தற்போது சற்று மெல்ல மெல்ல கடந்து வெளி உலகிற்கு தங்களை அடையாளம் காட்டி வருகின்றனர்.

பெண்கள் தினம் சொல்லும் செய்தி என்ன…?

பெண்ணுரிமைக்காக போராடிய போராளிகளைப் பற்றியும் பெண்கள் போர்க்குணத்துடன் கட்டியமைத்த இயக்கங்கள் பற்றியும் இந்நாளில் நன்றியுடன் நினைத்து சிறப்புச் செய்ய வேண்டும். கடந்த கால வரலாற்றை அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலரும் கற்று ஆராய்ந்து தீர்வு காண வேண்டும். அன்பிற்கு அடையாளமாகவும், தெய்வங்களாகவும், தெய்வத் தன்மை சூட்டப்பட்டாலும் பெண் சமூகத்தை மிகவும் கீழான நிலையிலேயே இந்தியச் சமூகம் வைத்திருக்கிறது என்பது வலராற்று உண்மை.

கல்வி வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் ஏற்படுதிய பொருளாதாரச் சுதந்திரமும் பெண்களிடையே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கெதிரான கொடுமைகளை கண்டு அயர்ந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப்போம்’ என்பதுதான் இந்த ஆண்டு மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகத்திற்கு தெரிவிக்கும் செய்தி.

பெண்ணே நீ உனக்கென வாழ்வது எப்போது…
உண்மையான மாற்றம் வரும் அப்போது.

Credits: Tamil Samayam