கோவில்பட்டியில் போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் போலீஸ் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி (மார்ச் 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெபராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவில்பட்டி வ.உ.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் போலீஸ் – பொதுமக்கள் பங்கேற்கும் நல்லுறவு விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்திற்குள்பட்ட கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புதூர், கயத்தாறு, கழுகுமலை, கொப்பம்பட்டி நிலையத்திற்குள்பட்ட பகுதி பொதுமக்கள் பங்கேற்கலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது.

கூடைப்பந்து, கைப்பந்து, எறிப்பந்து, இறகுப்பந்து, கபடி, கயிறு இழுக்கும் போட்டி, கிரிக்கெட், டென்னீஸ் உள்ளிட்ட பல்வேறு குழுப் போட்டிகளும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகளும் நடைபெறுகிறது.
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குள் வ.உ.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும். ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்கள் இம்மாதம் 14 மற்றும் 15ஆம் தேதி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி 94981 – 84217, கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமாறன் 94981 – 90940 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.