வெற்றி கைநழுவிப் போக இதுதான் காரணம்!!!

ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்; கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்’ என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நடிகையும் அமைதிப் போராளியுமான யோகோ ஓனோ (Yoko Ono). இதற்கு எல்லோருக்கும் தெரிந்த `சாவியைத் தொலைத்த முல்லா’வின் கதையை உதாரணமாகச் சொல்லலாம்.

ஒருநாள் ஊருக்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்தாராம் முல்லா நஸ்ருதீன். ஒருவர் அவரிடம், `என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். `என் சாவியைத் தேடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் முல்லா. `எங்கே தொலைத்தீர்கள்?’ என்று அவர் கேட்டதற்கு, `வீட்டுக்கருகில்’ என்று பதில் சொன்னாராம். ஆச்சர்யப்பட்டுப்போன அந்த உள்ளூர்க்காரர், `வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?’ என்றாராம். `இங்கேதானே வெளிச்சமாக இருக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாராம் முல்லா. இது போலத்தான். நம் பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும்; அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமாக ஒன்று வேண்டும். அது இருந்தால் வெற்றி எளிது. அது என்ன? தன்னம்பிக்கை. நம் பலம் நமக்கே தெரியாதது. அதனால்தான் வெற்றி கைநழுவிப் போகிறது; பலரால் இலக்கை எட்ட முடியாமல் போகிறது. அந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.