சிவனேன்னு ஒரு மூலையில் கிடந்திருப்பேன் – நித்யானந்தா

பாலியல் வழக்கு, குஜராத் ஆசிரமம் வழக்கு என புதிய வழக்குகள் துரத்தும் நிலையில் தற்போது நித்யானந்தா எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. குஜராத் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த போலீசார், சர்வதேச அளவில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை இன்டர்போல் மூலம் கண்டறிய உதவும் ப்ளூகார்னர் நோட்டீஸ் விடுவதற்கு, குஜராத் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர், இந்தியாவுக்கு வெளியே எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் மூலம் சத்சங்கம் என்ற பெயரில் தொடர்பு கொண்டு வருகிறார் நித்யானந்தா. கடந்த வியாழக்கிழமை நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில் தான் மிகப் பெரிய சாமியாராக வளர்ந்த கதையை விவரித்துள்ளார். சிவனே என்றிருந்த தன்னை ஓட ஓட விரட்டியதால் தான் பெரிய ஆளாகி விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் தான், தான் கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டி வந்ததாகவும், மதுரயைில் உள்ள மீனாட்சி அம்மன் தான் தனக்கு அருள் புரிந்ததாகவும் பெருமிதத்துடன் கூறியுள்ளார் நித்யானந்தா. மேலும், தனது பாஸ்போர்ட் முடக்கப்பட வேண்டும் என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிடவில்லை என்றும் தனக்கு எதிரான சதியால் தான் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்படவில்லை என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நித்யானந்தா இந்தியாவில் இல்லை என்பதை மத்திய அரசு முதன்முறையாக உறுதி செய்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் அளித்த பேட்டியில், நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பதைக் கண்டறிய, இந்தியாவின் அனைத்து துாதரங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.