களை கட்டியது மீன்பிடி தொழில், மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி: தருவைகுளம்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்திற்கு உட்பட்ட தருவைகுளம் விசைப்படகு மீனவர்கள் தங்குகடல் செல்வது வழக்கம். கொரோனா ஊரடங்கு காரணமாக மத்திய அரசு மீன்பிடி தடைக்காலத்தை 45 நாட்களாக குறைத்திருந்த நிலையில் ஜூன் 5-ம் தேதி கடலுக்கு சென்ற தருவைக்குளம் ஒரு சில விசைப்படகு மீனவர்கள் ஜூன் 13ம் தேதி காலை கரைக்கு திரும்பினார்கள். அதனை தொடர்ந்து நேற்று (15/06/2020) காலை ஒரு சில விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினார்கள். தங்குகடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் சூறை மீன் அதிக அளவில் பிடிபட்டுள்ளது.

அதே போன்று ஊளி, முரள், திருக்கை, மயில் மீன்களும் அதிக அளவில் பிடிபட்டது.மேலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. ஒரு கிலோ சீலா மீன் ரூபாய் 400 க்கும், ஊளி மீன் ரூபாய் 350-க்கும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 50 கிலோ முதல் 150 கிலோ எடை கொண்ட பல்வேறு வகையான மீன்களும் பிடிபட்டதால் மீனவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.