வித்தியபிரகாசம் மன வளர்ச்சி குன்றிய பள்ளிக்கு ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை கட்டிடம் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் வித்தியா பிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய அலுவலகம் கட்டுமான பணிகள், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை கட்டிடம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் வித்தியா பிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி புதிய கட்டிடம் திறப்பு நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (05.06.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் ரூ.2.83 கோடி மதிப்பிலும், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை கட்டிடம் ரூ.40 லட்சம் மதிப்பிலும் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும் வித்தியா பிரகாசம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தையும் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அளிக்கபடும் சிறப்புப்பயிற்சி, தசைப்பயிற்சி ஆகியவற்றையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்தாவது: புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளது. இதில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. பழைய கட்டிடம்; பதிலாக புதிய கட்டிடம் வேண்டுமென்று கோரிக்கையாக வைத்தார்கள்.

இந்த கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கோரிக்கையினை பரிசிலனை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்தார்கள். கடந்த வாரம் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியம் புதிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்கப்பட்டது. இன்று ரூ.2.83 கோடி மதிப்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலகம் கட்ட அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. புதிய அலுவலக கட்டிடம் தரைத்தளம் மற்றும் முதல் தளம் 16,916 சதுர அடியில் கட்டப்படுகிறது. தரைத்தளத்தில் ஒன்றிய பெருந்தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), கணினி அறை மற்றும் முதல் தளத்தில் உதவி பொறியாளர் அறை, பயிற்சி அறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) அறைகள் இடம்பெற உள்ளது.

கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பில் தாய் சேய் நல கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இன்று ரூ.40 லட்சம் மதிப்பில் 8 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறை, செவிலியர் அறை, மருந்து வைக்கும் அறை ஆகிய அறைகள் கொண்ட கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. மேலும் வித்தியபிரகாசம் மன வளர்ச்சி குன்றிய பள்ளிக்கு ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பான பயிற்சி அளிப்பதோடு அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறைக்கப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சந்திரசேகர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், துனைத் தலைவர் பழனிசாமி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (மருத்துவ பிரிவு) வெள்ளைசாமி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சங்கரஜோதி, வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையர் ராஜாராம், இணை இயக்குநர் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை (பொ) பொன்இசக்கி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, உறைவிட மருத்துவர் பூவேஸ்வரி, மருத்துவ கண்காணிப்பாளர் கமலவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசம், வசந்தா, ஒன்றிய பொறியாளர் தமிழ்செல்வன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ராமசந்திரன், முக்கிய பிரமுகர்கள் அய்யாத்துறை பாண்டியன், விஜயபாண்டியன், சுப்புராஜ், தனஞ்ஜெயன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.