ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் : டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அநாவசியமாக வெளியே செல்லக்கூடாது என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் செல்வோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தாமல் சாலையில் அலட்சியமாக சுற்றித்திரிந்ததாக இதுவரை 2109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2478 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். மேலும் 1250 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 
இந்நிலையில், ஊரடங்கின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி அறிவித்ததையடுத்து, தூத்துக்குடி  தென்பாகம் காவல் நிலைய போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மாநில காவல்துறை உத்தரவுபடி திருப்பி கொடுக்கும்பணியை மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் துவக்கி வைத்தார். தென்பாகம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் வாகனத்தை  ஆய்வு செய்த பின் வழங்கினார். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழங்கப்படும். எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட வரிசையின்படி, வாகன உரிமையாளர்களுக்கு, எந்த இடத்திற்கு வந்து வாகனங்களை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவல் முன்னதாக அனுப்பப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது..