தூத்துகுடி தூத்துக்குடி மாநகராட்சி கணேஷ்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை செய்வதற்கு ஏதுவாக ரூ.13 லட்சம் செலவில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் வசதியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்து ஸ்கேன் எடுக்கும் கருவியினை பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்), பி.சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது: தூத்துக்குடி மாநகராட்சிக்கு எல்கைகுட்டபட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக 7 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையங்கள் மூலம் பொது மருத்துவம், தாய் சேய் நலம், தடுப்பூசி போடுதல், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு போன்ற தொற்றா நோய்கள் மற்றும் அவ்வபோது நிலவும் தொற்று நோய்களுக்கான மருத்துவம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கர்ப்பிணி தாய்மார்கள் தங்களின் குழந்தை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்வதற்கு ஸ்கேன் வசதி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஸ்கேன் வசதிக்காக தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை இருந்து வந்தது.
இதனை கருத்தில்கொண்டு அம்மாவின் அரசு, ஏழை கர்ப்பிணி தாய்மார்களின் வசதிக்காகவும், கொரோனா தொற்று நோய் ஏற்படாமல் இருப்பதற்காகவும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மருத்துவ மேம்பாட்டு நிதி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பொது நிதியின் மூலம் அல்ட்ரா சவுன்டு ஸ்கேன் வசதிகள் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மாநகராட்சிக்குட்பட்ட குரூஸ்புரம், மடத்தூர் மற்றும் கணேஷ்நகர் ஆகிய மூன்று நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் அல்ட்ரா சவுன்டு ஸ்கேன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3,000 கர்ப்பிணி தாய்மார்கள் பயன் அடைவார்கள்.
இன்று கணேஷ்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்ட்ரா சவுன்டு ஸ்கேன் வசதி திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கர்ப்பணி பெண்கள் 3 மாதத்தில் இருந்து குழந்தை பிறப்பதற்கு முன்பு வரை ஸ்கேன்களும் எடுக்க முடியும். தமிழகத்திலே தூத்துக்குடி மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில்தான் முதலாவதாக தாய் சேய் நலம் கண்டறிய அல்ட்ரா சவுன்டு ஸ்கேன் வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
கரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் இருக்க மத்திய அரசால் சுய ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் சுய ஊரடங்கு உத்தரவு மே 17ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சருடன் காணொலி காட்சி மூலம் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். முதலமைச்சரும் ஒவ்வொரு மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள தொடர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 6,724 நபர்கள் கரோனா தொற்று நோய் பரிசோதனை செய்ததில் 38 நபர்களுக்கு கரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் ஏற்கனவே 26 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு நபர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளார். தற்போது 11 நபர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 நபர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், 1 நபர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். முறையாக அனுமதி பெறாமல் சென்னையில் இருந்து நமது மாவட்டத்திற்கு காய்கறி வாகனத்தில் ஏறி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் சிகிச்சை பலனின்றி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பாண்டவர்மங்களம், ஆத்திகுளம், இளம்புவனம், மழவைராயநத்தம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் தொடர்ந்து சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய் கட்டுபாட்டு தடுப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலம் குறிப்பாக குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வேலை செய்து வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற்று வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சோதனைசாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பிரி கொரான்டைன் முகாம்களில் தங்க வைக்கப்படுகிறது.
கோவில்பட்டி பகுதியில் நேஷனல் பொறியியல் கல்லூரியில் இதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 5 இடங்களில் பிரி கொரான்டைன் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு சுமார் 600 நபர்கள் தங்குவதற்கு ஏதுவாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பரிசோதனை மேற்கொண்ட பின் தொற்று இல்லை என்ற அறிக்கை பெறப்பட்ட பின் இவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்து 14 நாட்கள் தனிமையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. அவர்களின் வீட்டில் ஸ்டிக்கர்கள் ஒட்டி பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த முகாம்களில் தங்கியுள்ள நபர்களுக்கு கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டால் அந்த முகாம்களில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வெளி மாநில தொழிலாளர்கள் நமது மாவட்டத்தில் 8,700 நபர்கள் பல்வேறு தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகிறார்கள். நமது மாவட்டத்தை சேர்ந்த 7,000 நபர்கள் குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உள்ளிட்ட பகுதியில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நமது மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்கள். இவர்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி நமது மாவட்டத்தில் பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலத்தை சேர்ந்த நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அவர்களை அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக பீகார், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 460 நபர்கள் திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விருப்பம் தெரிவித்துள்ள எஞ்சியுள்ள தொழிலாளர்களையும் அனுப்பி வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.
முதலமைச்சர், சுய ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த பின் பொருளாதாரம் எவ்வாறு மீட்டு எடுக்க வேண்டும் என்பதை ஆராய வல்லுநர்கள் குழு அமைத்துள்ளார்கள். இந்த குழுவில் பரிந்துறையின்படி பொருளாதாரம் மீட்டு எடுக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பதற்காக அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களை தனிமைப்படுத்திகொள்வதோடு, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வகுமார், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் பார்த்திபன், உதவி செயற்பொறியாளர் சரவணன், தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.கிருஷ்ணலிலா, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.அருண்குமார், உதவி பொறியாளர்கள் பிரின்ஸ், ராமச்சந்திரன், கணேஷ்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மரு.ஆர்த்தி, முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், செரினாபாக்யராஜ் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.