தூத்துக்குடி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னை மற்றும் வடமாநிலங்களிலிருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு திரும்பியவர்களை கண்டறிந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவினால் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

ஏற்கனவே மாவட்டத்தில் கரோனா பாதித்த 10 பகுதிகள் கட்டுபாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் இளம்புவனம், பாண்டவர்மங்கலம், மழவராயநத்தம், ஆதனூர் உள்ளிட்ட 4 பகுதிகளும் தற்போது கட்டுபாட்டு மண்டலங்களாக மாறியுள்ளன. இப்பகுதியிலிருந்து கரோனா பாதிப்புடன் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் மழவராயநத்தத்தை சேர்ந்த ஆண், ஆதனூரை பெண் உள்ளிட்ட 2 பேர் பூரண நலமடைந்து வீட்டுக்கு திரும்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொண்டு கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களை வீட்டுக்கு அனுப்பிவைத்தார்.

அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் சுய தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.