தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் ஒரேநாளில் அதிகளவு சரக்குகளை கையாளுதல் மற்றும் 24 மணி நேரத்தில் அதிகளவு நிலக்கரியை கையாளுதல் ஆகிய இரண்டு புதிய சாதனைகளை படைத்துள்ளது.
இது தொடர்பாக துறைமுக சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வ.உ.சி துறைமுகம் கடந்த 12 ம் தேதி அன்று ஒரேநாளில் 1,89,395 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு, இதற்கு முந்தைய சாதனையான 26.07.2019 அன்று ஒரே நாளில் கையாண்ட அளவான 1,80,597 மெட்ரிக் டன் அளவை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இச்சாதனைக்கு முக்கியமாக தொழிற்சாலை கரி (53,077 டன்கள்) அனல்மின்கரி (45,829 டன்கள்),கிலிங்கர்ஸ் (13,217 டன்கள்), புண்ணாக்கு (4,000 டன்கள்),காஸ்டிக் சோடா (2,241 டன்கள்) மற்றும் சரக்கு பெட்டக சரக்குகள் (70,254டன்கள்) கையாளப்பட்டதால் இச்சாதனை நிகழ்ந்துள்ளது .வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்குதளம் -9ல் கடந்த 12 ம் தேதி அன்று எம்.வி. கீரின் கேமாக்ஸ் எஸ் என்ற கப்பலிலிருந்து 55,363 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதியசாதனை படைத்துள்ளது.
லைபீரியா நாட்டு கொடியுடன் எம்.வி. கீரின் கேமாக்ஸ் எஸ் என்ற கப்பல் 229மீட்டர் நீளமும், 32.26 மீட்டர் அகலமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமுடன் வந்த இக்கப்பல் இந்தோனேஷியா நாட்டிலுள்ள அடாங்க் என்ற துறைமுகத்திலிருந்து 76,285 டன் நிலக்கரியை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது. இக்கப்பலில் 76,285 டன் நிலக்கரியை சென்னையிலுள்ள இந்தியாகோக் மற்றும் பவர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனையின் கப்பல் முகவர் டெல்டாவோல்டு வைல்டுஷிப்பிங், தூத்துக்குடி மற்றும் ஸ்டிவிடோர் ஏஜெண்ட் வில்சன்ஷ் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடிஆவர். இக்கப்பலிருந்து நிலக்கரியை இம்கோலாகிரேன் கம்பெனி பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்களால் சரக்குகள் கையாளப்பட்டன.
வ.உ.சிதம்பரனார் துறைமுகபொறுப்புக் கழகத் தலைவர் ராமசந்திரன், இந்த ஒருங்கினைந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து கப்பல் முகவர்கள்,அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சர்வதேச கப்பல்வழி சரக்கு போக்குவரத்து கடந்த நிதியாண்டு கையாளப்பட்ட சரக்குகளை ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டு சற்று குறைவாகவே இருக்கும், சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதற்கு, தேவையான அனைத்து செயல்பாடுகளையும் மேம்படுவத்துவதற்கு துறைமுகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என கூறியுள்ளார்.