காவல்துறையினருடன் சேர்ந்து நடிகர் சசிகுமார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 16,365  பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 521 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவரது உத்தரவின்படி காவல்துறையினர் தன்னர்வலர்களுடன் சேர்ந்து கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒலிபெருக்கிகள், எல்.இ.டி. திரை பொருத்திய வாகனங்கள், ஆட்டோவில் பிரசாரம் ஆகியவை மூலமாக தொடர்ந்து விழிப்பிணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக நடிகரும் இயக்குநருமான சசிகுமார், மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சாலையில் காவல்துறையினருடன்  இணைந்து நின்று இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்தவர்களிடம் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருங்கள், அனாவசியமாக வெளியே சுற்றாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். இதுதொடர்பான விடியோ ஒன்று மதுரை மாநகர காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.