கரோனா தடுப்பு பணியில் பணிபுரிய முன்னாள் படைவீரா்களுக்கு தூ.டி ஆட்சியா் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்புப் பணியில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் முன்னாள் படைவீரா்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று நோய் குறித்து பாதுகாப்புப் பணியில் காவல் துறையுடன் முன்னாள் படைவீரா்களை பணியமா்த்திட ஆணைகள் பெறப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 60 வயதுக்குள்பட்ட திடகாத்திரமான முன்னாள் படைவீரா்கள் ஏப்.10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை காவலா்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இதற்கான மதிப்பூதியம் ஏற்கெனவே தோ்தல் பணிகளில் வழங்கப்பட்டது போல அளிக்கப்படும். பணியமா்வு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மூலம் முன்னாள் படைவீரா்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே பணியமா்த்தப்படும். விருப்பம் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் நாட்டு நலன் கருதி தானாகவே முன்வந்து ஏப். 9 ஆம் தேதி பிற்பகல் அல்லது 10 ஆம் தேதி முற்பகல் தங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி பணியில் சோ்ந்து கொள்ளலாம். பணியின் போது உரிய பாதுகாப்பு சாதனங்கள் காவல்துறை மூலம் வழங்கப்படும். மேலும், தூத்துக்குடியில் உள்ள முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை 0461 -2902025 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விருப்பத்தை தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.