இறைச்சி, மீன் அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை: ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் இறைச்சி, மீன் மற்றும் இதர பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடை மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு அரசு கரோனா நோய் பரவுதலின் தடுப்பு நடவடிக்கையாக, 30.04.20 வரை ஊரடங்கு உத்திரவை பிறப்பித்துள்ளது. ஆனால், பொதுமக்களுக்கு உணவு போன்ற அத்தியாவசியபொருட்களின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் பொது மக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  ஆனால், சில மீன் மற்றும் பல இறைச்சி வியாபாரிகளும், இதர உணவுப் பொருட்களின் வியாபாரிகளும் இந்த இக்கட்டான காலகட்டத்தைப் பயன்படுத்தி அதிக லாபம் பெற வேண்டும் என்ற தவறான நோக்கத்துடன் பொருட்களுக்கு அதிக விலை வைத்து விற்கப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஊரடங்கு உத்திரவு அமலில் உள்ள இந்த காலத்தை தவறாகப் பயன்படுத்துவது மனிதாபிமானமற்ற செயலாகும். கோழிப் பண்ணைகள், இதர உணவு தயாரிப்பு நிறுவனங்களை இயக்க அனுமதியும் சரக்குப் போக்குவரத்து அனுமதியும் உள்ள பொழுது இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தி விற்பனை செய்வது சட்ட விரோதம் மட்டுமின்றி இரக்கமற்ற செயலாகும்.
எனவே, பொதுமக்களின் நலன் காக்க, கோழி, ஆடு உள்ளிட்ட இறைச்சி வகைகளையும், மீன்களையும், இதர உணவுப் பொருட்களையும் 25.03.2020-ம் தேதிக்கு முன்னதாக விற்கப்பட்ட அதே விலைக்கு விற்பனை செய்யவேண்டும் என்று வியாபாரிகளுக்கு அத்தியாவசியபொருட்கள் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படுகின்றது. தவறும்பட்சத்தில், மேற்கூறியசட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. விலை உயர்வு குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க விரும்பினால், 0461-23400101 அல்லது 0461- 23400012 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.