ஓரிரு நாட்களில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கும் : மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமூக பரவல் கரோனா தொற்று ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 129 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தது. எனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் ரவுண்டானா அருகே அமைந்துள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சிம்ரான்ஜித் சிங் கலோன், தாசில்தார் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை தீவிரமாக கடைப்பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பு உடையவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் அனைவருக்கும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு 150 பேர் வீதம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகின்றது. நமது மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைப்பதற்கான பணிகளும் நிறைவடைந்துவிட்டன. மருத்துவ கவுன்சிலின் அனுமதி கிடைத்ததும் இன்னும் ஓரிரு நாட்களில் கரோனா பரிசோதனை மையம் செயல்பட தொடங்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில் சமூக பரவல் கரோனா தொற்று ஏற்படவில்லை. காய்ச்சல், சளி, இருமல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக கூடுதலான இடங்களில் காய்கறி கடைகளை திறப்பதற்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தேவையான இடங்களில் கூடுதலாக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.