மதம் மற்றும் சமுதாய பிரிவினை ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : மாவட்ட ஆட்சித்தலைவர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஜமாத் தலைவர்களுடன் மாவட்ட ஆட்சிய‌ர் சந்தீப் நந்தூரி ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது:  கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட காயல்பட்டிணம் மருத்துவரை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் சுமார் 15 நபர்களுக்கு தொற்றுநோய் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் உறுதியான மருத்துவர் பல நாட்கள் நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளித்துள்ளார். ஒரு சமுதாய மக்களை தனிமைப்படுத்துவதாக நினைக்காமல் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ள நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஜமாத் தலைவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காயல்பட்டணம் நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் தெரு பகுதியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பதற்கு தன்னார்வலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை காயல்பட்டணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் வயது வித்யாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் பரவ வாய்ப்புள்ளது. எனவே சமூக இடைவெளியை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த நோய் பரவாமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுத்தால் மட்டும்தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். குழந்தைகள், முதியோர்களை வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கக்கூடாது. பொதுமக்கள் முகமூடிகளை கட்டாயமாக அணிய வேண்டும். ஜமாத் தலைவர்கள் தங்களது பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களிடையே அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

எந்தவொரு மதம், சமுதாய பிரிவினையை ஏற்படுத்தும் நபர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு நோய் பரவாமல்  இருக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார். 

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன்,  மற்றும் ஜமாத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.