தூத்துக்குடி குறிஞ்சிநகரை சேர்ந்த இளம் விஞ்ஞானி

தூத்துக்குடி குறிஞ்சிநகரை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர் ஜான் பினிகாஸ். ஊரடங்கின் போது என்ன செய்வது என்று யோசித்த, ஜான்பினிகாஸ் வீட்டில் இருந்த பழைய பொருட்களை கொண்டு புதிதாக நவீன ஹெட்போனை உருவாக்கி அசத்தி உள்ளார். இந்த ஹெட்போனில் பாட்டு கேட்பதற்கு மட்டுமின்றி பல கூடுதல் சிறப்பம்சங்களுடன் வடிவமைத்து உள்ளார். இதில் ஒரே நேரத்தில் 3 செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக டார்ச் லைட் பொருத்தப்பட்டு உள்ளது. மேற்புறத்தில் அமைக்கப்பட்டு உள்ள பட்டன்கள் உதவியுடன் சத்தத்தை கூட்டி, குறைத்துக் கொள்ள முடியும். ஹெட்செட்டில் உள்ள பேட்டரியை ரீசார்ஜ் செய்யும் வசதியும் ஏற்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து மாணவன் ஜான் பினிகாஸ் கூறுகையில், “8-ம் வகுப்பு முதலே ரோபோடிக்ஸ் துறையில் எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. அதை சார்ந்த நிறைய முயற்சிகள் செய்து கொண்டு இருப்பேன். இதற்கு முன்பு மனிதன் நுழைய முடியாத குகைக்குள் சென்று மனிதன் நடமாடுவதற்கு ஏற்ற சூழல் உள்ளதா, வெப்பநிலை எவ்வளவு உள்ளது, இடர்கள் எங்கெங்கு உள்ளது என்பது குறித்து ஆராய்வதற்காக ரோபோ ஒன்றை வடிவமைத்தேன். அதேபோன்று காட்டில் சிங்கங்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ரோபோவை உருவாக்கி உள்ளேன். பள்ளிக்கூடங்களில் நடந்த பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்று உள்ளேன். எனது அடுத்த முயற்சியாக மனிதனின் கட்டளைகளை ஏற்று செய்யும் ரோபோவை வடிவமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்“ என்றார்.