ஊரடங்கு சில தளர்வில் இருந்தாலும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் இருந்த தூத்துக்குடி மாவட்டம்

கரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மாா்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதால் மூன்றாவது கட்ட ஊரடங்கில் சில நிபந்தனைகளுடன் தளா்வு அளிக்கப்பட்டதால், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. கடந்த 40 நாள்களாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த பொதுமக்கள் திங்கள்கிழமை சகஜம் போல வெளியே வரத் தொடங்கியதால் அனைத்துப் பகுதிகளிலும் கூட்டம் அதிகளவு காணப்பட்டன. 

இதையடுத்து, மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் காவல் துறையினா் மூலம் பொதுமக்களுக்கு நிபந்தனைகளை விளக்கமாக எடுத்துரைத்து, அநாவசியமாக திறக்கப்பட்ட கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தினர். பின்பு வெளியே வழக்கம் போல சுற்றித்திருந்த பொதுமக்களை எச்சரித்து அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என எச்சரித்து அனுப்பி வைத்தனா்.

இதனால், காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இயல்பு நிலையாக காட்சியளித்த தூத்துக்குடி பின்னா் காவல்துறையின் கட்டுக்குள் வந்தது.