நெல்லை மாவட்டம் கூத்தங்குளி தோமையார்புரத்தில் நாட்டுப்படகு தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் கடலூரைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக வேலை இல்லாமலும், தனது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமலும் தவிர்த்து வந்தனர். ஊரடங்கு நீடித்தனால் தொழிலாளர்கள் அங்கிருந்து சுமார் 550 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலூருக்கு கடற்கரை வழியாகவும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும் மாறி மாறி நடந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடிவு திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் இரவில் கூத்தங்குளியில் இருந்து புறப்பட்ட 12 தொழிலாளர்களும் உவரி, கூடு தாழை வழியாக நடந்து வந்து நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட எல்லையான பெரியதாழைக்கு வந்தனர். அங்கு போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளதால், கடற்கரை வழியாக நடந்து சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, நடந்து சென்ற 12 தொழிலாளர்களையும் அழைத்து சென்றனர். பின்பு, அங்குள்ள சோதனைச்சாவடியில் உள்ள மருத்துவ குழுவினர், 12 தொழிலாளர்களுக்கும் கரோனா தொற்று அறிகுறி உள்ளதா? என்று மருத்துவ பரிசோதனை நடத்தினர். இதில் அவர்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த 12 தொழிலாளர்களையும் கூத்தங்குளியில் உள்ள படகு தயாரிக்கும் நிறுவன வளாகத்தில் மீண்டும் தங்க வைக்கவும், அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யவும், போலீசார், வருவாய் துறையினர் ஏற்பாடு செய்தனர்.