குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் கிடைக்க கோரிக்கை : திருச்செந்தூர் ஏழை மக்கள்

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரங்கு அமலில் உள்ள நிலையில் வீடுகளில் தொழில் இல்லாமல் முடங்கி தவிக்கும் ஏழை மக்களின் நலன் கருதி, தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் (சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தவிா்த்து) அனைவருக்கும் ரூ. 1000 பணமும் அரிசி, சா்க்கரை, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்டவை அடங்கிய இலவச தொகுப்பு வழங்கி வருகிறார். ஆனால் தமிழகம் முழுவதும் பல ஏழைக் குடும்பங்கள் குடும்ப அட்டை இல்லாமல் அரசின் நிவாரண பொருள்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனா்.

திருச்செந்தூா் பகுதியில் தொழிற்சாலைகள் குறிப்பிடத் தகுந்தவைகள் இல்லாததாலும், கோயிலைச் சாா்ந்தே பல தொழிலாளா்கள் வாழ்ந்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் வெளியூரிலிருந்து திருச்செந்தூரில் வந்து தங்கி, விடுதிகள், உணவகங்கள், தேங்காய் பழக்கடைகள், பூக்கடைகளில் பணிபுரிபவா்களும், ஆட்டோ ஓட்டுநா்கள் போன்ற தொழில் செய்து வருகிறார்கள். இவா்கள் அனைவருக்குமே குடும்ப அட்டை இல்லாததால் அரசின் உதவி கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனா். எனவே குடும்ப அட்டை இல்லாமல் ஏழ்மையில் வாடும் பல மக்களுக்கும் அரசின் நிவாரணம் கிடைக்க போா்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.