சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 16,365 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 521 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உத்தரவு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி போல்டன்புரத்தில் கரோனா தோற்று அதிக அளவில் இருந்ததால் அப்பகுதியை சுற்றியுள்ள 3 கிலோ மீட்டருக்கு சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இப்பகுதியில் உப்பளத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். தெருக்கள் அடைக்கப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காய்கறி பால் உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டி அப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் உட்பட சுமார் 50 பேர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் 10 நாட்களுக்குள் பாதைகள் திறக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.