தி.மு.க சார்பில் அளித்த பொன்னி அரிசி மூட்டையில் ரேசன் அரிசி

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மத்திய மற்றும் மாநில அரசுகள் நீட்டித்துள்ளன. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கியதோடு அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வருவதனை கருத்தில் கொண்டு தமிழக அரசின் உத்தரவின் பேரில் ஏப்ரல் மாத தேவைக்கான அரிசி, எண்ணெய், பருப்புகள் மற்றும் ரூ.1,000 உட்பட கொரோனா நிவாரண பொருட்கள் வீட்டிற்கே கொண்டுவந்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் அடிப்படை வாழ்வாதார பாதிப்பை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் போல்டன்புரம் பகுதியில் ஊரடங்கு பாதிப்பால் உணவு தேவைக்காக தவித்து வந்தனர். அங்கு திமுக சார்பில் நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு பிராண்ட் அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன. இதனை வீட்டிற்கு வாங்கிச் சென்ற பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திமுகவினர் வழங்கிய கோபுரம் பிராண்ட் அரிசி மூட்டையில் பிராண்ட் அரிசிக்கு பதிலாக ரேசன் அரிசியே இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பெண்மணி ஒருவர் இப்படி எங்களை ஏமாற்றலாமா என்று பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.