முக்கிய பகுதிகள் சீல் வைக்கப்பட்டதால் மக்கள் அவதி : தூத்துக்குடி

கரோனா பரவலில் தூத்துக்குடி சிகப்பு மண்டலமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக அனைத்து பகுதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பொதுமக்கள் வெளியே செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகள் மற்றும் மருத்துவமனைகளுக்குக் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் உள்ள பிரதான சாலைகள் மற்றும் அதனை இணைக்கும் தெருக்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன. டபிள்யூஜிசி ரோடு, விஇ ரோடு, தாமோதரன் நகர், சண்முகபுரம், பிரையன்ட் நகர் 1 முதல் 12 வரையிலான தெருக்கள், சிதம்பர நகர் 1 முதல் 10 வரையிலான தெருக்கள், அண்ணாநகர், டூவிபுரம், மட்டகடை, ஆகிய பகுதிகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. எனவே அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே வருவோரின் நலன் கருதி பேரிகார்டு வைத்து மறைக்கப்பட்ட இடங்களில் காவலர் ஒருவரை பணியில் இருக்க செய்து அவ்வழியே வருவோரை விசாரித்து அதன் பின்னர் அவர்கள் செல்ல வழிவகை செய்ய வேண்டும். இதற்கு மாவட்ட எஸ்பி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.