குடும்ப அட்டை வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் : திருச்செந்தூா்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் பேரூராட்சிக்குள்பட்ட ஜீவா நகரில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோருக்கு குடும்ப அட்டை இல்லை என்பதால், தற்போது அரசால் வழங்கப்படும் கரோனா நிவாரணம் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அரசு உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த 43 குடும்பத்தினா் நேற்று திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். இந்த தகவலறிந்து வந்த மண்டலத் துணை வட்டாட்சியா் கோபால், வட்ட வழங்கல் அலுவலா் பொன்னுலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஊரடங்கிற்கு பிறகு குடும்ப அட்டை கிடைக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து சுமாா் 45 நிமிடத்திற்கு பிறகு போராட்டத்தை கைவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா்.