ஊரடங்கு உத்தரவை மீறி வேனில் வந்த 14பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்: டிரைவர் மீது வழக்குப் பதிவு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்த ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த மூதியவரை பார்ப்பதற்காக சென்னை கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் ஆகிய பகுதிகளில் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட முதியவரின் மகன்கள் மற்றும் உறவினர்கள் என உறவினர்கள் 13 பேர் ஒரு வாடகை வேனில் விளாத்திகுளத்திற்கு வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எல்லையான புதூர் சென்னமரெட்டிபட்டி சோதனைச் சாவடி பகுதியில் வேன் வந்தபோது, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். உரிய ஆவணம் இன்றி சென்னையிலிருந்து அவர்கள் வந்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் வருவாய் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விளாத்திகுளம் தாசில்தார் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து சென்று டிரைவர் உட்பட 14 பேருக்கு புதூர் அரசு மருத்துவமனையில் முதற்கட்ட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

பின்னர் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் முழு பரிசோதனை செய்யப்பட்டதில் 14 பேருக்கும் கரோனா தொற்றுக்கான அறிகுறி இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின்பேரில் 14 பேரும், காமராஜ் நகரில் உள்ள உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியோரின் வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். மேலும் வேனை பறிமுதல் செய்தது மட்டுமின்றி ஊரடங்கு உத்தரவை மீறி வேனை ஓட்டி வந்த டிரைவர் யுவராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.