19 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்றதால் மகிழ்ச்சியில் மீனவர்கள்…

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருந்தாலும், மீனவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க மீன்பிடி தொழிலுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீன்பிடி தொழிலுக்கு நிபந்தனையுடன் கூடிய விதிவிலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது.

எனவே, தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையை தளமாக கொண்டு ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று காலை 20 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள், அரசு காட்டிய வழிமுறைகளின் படி, ஒருபடகில் 3 நபர்களுக்கு மிகாமலும் பாதுகாப்பு முகக்கவசங்கள் அணிந்தும் சென்று வந்தனர்.

19 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்று வந்த மீனவர்களுக்கு சாளை, நண்டு, காரல், இறால், விளமீன் உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைத்திருந்தன. குறைந்த அளவில் கிடைத்த இந்த மீன்களை வாங்குவதற்கு ஏராளமானோர் போட்டி போட்டனர். இதனால் மீன்களுக்கு நல்ல விலை இருந்தது. மீன் வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியுடன் கடைபிடித்து மீன்களை வாங்கிச் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டனர்.