தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு

ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 100 தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார சிப்பந்தி ஆகியோர்களுக்கு, பாதுகாப்பு உடை, பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் மற்றும் ஓட்டப்பிடாரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை வளாகம் ஆகிய இடங்களில், தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார சிப்பந்தி ஆகியோர்களுக்கு, பாதுகாப்பு உடை, பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் ஏற்பாட்டின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (10.04.2020) நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, புதியம்புத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 சுகாதார சிப்பந்திகளுக்கும், ஓட்டப்பிடாரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 தூய்மை காவலர்கள் என மொத்தம் 100 நபர்களுக்கு பாதுகாப்பு உடை, பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். நீராவிமேடு பகுதியை சேர்ந்த மாரிசெல்வம்-கவிதா தம்பதியின் மகன் 1ம் வகுப்பு படிக்கும் சுரேஷ் தான் ஸ்கேட்டிங் ஷ_ வாங்க சேர்த்து வைத்த தொகையினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விளாத்திக்குளம் சட்மன்ற உறுப்பினர் போ.சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
பின்னர், அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கொரானோ வைரஸை பரவுதலை தடுப்பதற்காகவும், கொரோனா நோய் தொற்றிற்கு நிரந்தர தீர்வு காண, அதற்குரிய மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலகளாவிய மக்கள் நலனை காப்பதற்காக உலக நாடுகள் எல்லாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நமது நாட்டிலும், மக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை 21 நாட்கள் அதாவது ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை கடைபிடிக்கின்ற நேரத்தில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க கூடாது என்பதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனடிப்படையில், தமிழகத்தில் வாழ்கின்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண தொகை ரூ.1000/- மும், ஏப்ரல் மாதத்திற்கான ரேசன் பொருட்களையும் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்கி வருகிறது. 
அதுமட்டுமில்லாமல் பத்திரிக்கையாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்ற வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல், நாள்தோறும் வேலை செய்து பிழைக்கின்றவர்களின் நிலையை அரசு கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கி வருகிறது. மேலும், மக்கள் சுய ஊரடங்கை கடைபிடிக்கின்ற நேரத்தில், அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வழிவகை செய்துள்ளது. குறிப்பாக காய்கறி சந்தையில் மக்கள் அதிகமாக கூடாத வகையில் பேரூந்து நிலையம், பள்ளி வளாகம் மற்றும் மக்கள் வசிக்கின்ற இடத்திலேயே காய்கறிகளை பெற்று கொள்ள நடமாடும் காய்கறி அங்காடி வாகனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் உணவு பொருட்கள் மொத்த உற்பத்தியை அதிகரித்து, அதன் மூலம் விலைவாசியை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு உணவு பொருட்கள் எளிதாக கிடைக்கவும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவப் பணியாளர்களின் மகத்தான பணியினால், கொரோனா வைரஸ் தொற்று மேலும் பரவமால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் 22 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுடன் தொடர்புடையவர்களும் தணிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தற்போது 1,700 வெளிநாடு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். 
நமது மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் பாதுகாப்பு உடை, அத்தியாவிய உணவு பொருட்களையும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக இன்று ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய பகுதியை சேர்ந்த சுகாதார சிப்பந்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் என 100 நபர்களுக்கு பாதுகாப்பு உடை, பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி உள்ளோம். தமிழ்நாடு முதலமைச்ச நாள்தோறும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு உயிரும் முக்கியம், எனவே, மக்கள் சுய ஊரடங்கு உத்தரவினை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, மக்கள் சுய ஊரடங்கை கடைபிடித்து, தங்கள் குடும்பத்தை பாதுக்கின்ற போது, நமது நாடும் பாதுகாக்கப்படும். 
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.60 இலட்சம் மதிப்புள்ள தூத்துக்குடி அரசு அருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் வழங்கி உள்ளார்கள். நமது மாவட்டத்தில் உள்ள வசதி வாய்ப்புள்ளவர்கள், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற அளவு கொடுக்க முன்வர வேண்டும். இதுவரை நமது மாவட்டத்தில் ரூ.60 இலட்சம் வரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்கள். வழங்கிய அத்தனை நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
செய்தி துறை தொடர்புடைய திரைப்படத்துறையில் இருந்து முதன்முதலாக நடிகர் சிவகார்த்திக்கேயன் ரூ.25 இலட்சம் வழங்கி இருக்கிறார். அதைப்போல் இன்று இயக்குநரும், நடிகருமான ராகவா லரானஸ் ரூ.3 கோடி வழங்கியுள்ளார். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் தங்களது தரத்திற்குகேற்ப முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகிறார்கள். நமது மாநிலத்தில் சமூக இடைவெளியை மக்கள் சிறப்பாக கடைபிடித்து வருவதால் கொரேனா வைரஸ் தொற்று பரவுதல் கட்டப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். மேலும், தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து முழுமையாக நம்மை காத்துக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மருத்துவமனையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குநர் அனிதா, வட்டாட்சியர் ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய மார்க்ரெட் வளர்மதி, புதியம்புத்தூர் ஊராட்சி தலைவர் பழனிசெல்வி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மதுரம்பிரைட்டன், மாவட்ட கவுன்சிலர் தேவராஜ், ஒன்றிய கவுன்சிலர் அழகிரி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி தலைவர் சுடலைமணி, முக்கிய பிரமுகர்கள் தர்மராஜ், ஆறுமுகசாமி, ராஜநாடார், முத்துசாமி, மாடசாமி மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.