100 பவுன் நகை கொள்ளை போனதாக நாடகமாடிய பெண் கைது : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய செல்வம் நகரைச் சேர்ந்த வின்சென்ட் சேவியர் பிச்சை(59) என்பவர் 02.04.2020 அன்று இரவு தனது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், தானும் தன் மனைவி ஜான்சிராணியும்(58) படுத்திருந்த அறையை வெளிப்புறமாக தாழிட்டு பக்கத்தில் இருந்த அறையில் உள்ள பீரோவில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றதாக 03.04.2020 அன்று காலை தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் வின்சென்ட் சவேரியார் பிச்சையின் மனைவி ஜான்சிராணி என்பவர் கணவரின் கஞ்சத்தனத்தின் காரணமாக நகையை திருடியதோடு குடும்பத்தாரை ஏமாற்றும் விதமாக கொள்ளை சம்பவ நாடகமாடி வீட்டருகில் உள்ள காலி இடத்தில் நகைகளை புதைத்து வைத்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிரேமா அவர்கள் வழக்குப்பதிவு செய்து ஜான்சி ராணியை கைது செய்தார். மேலும் திருடப்பட்ட 74.21 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்திற்குள் துரிதமாக செயல்பட்ட தாளமுத்து நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.