உழக்குடி மற்றும் கலியாவூர் கிராமத்தில் தூத்துக்குடி ராஜலெட்சுமி கல்லூரியின் வரலாற்று துறை மாணவர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
மாணவர் ஆறுமுக மாசான சுடலை, தொல் பொருள் ஆராய்ச்சியாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் உழக்குடி பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் ஆறுமுக மாசான சுடலை கூறும்போது, உழக்குடி கலியாவூரில் செல்லும் சாலையோரமாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடை அமைக்க பள்ளம் தோண்டினர். அப்போது பல வகையான மண்பாண்டங்கள் உடைந்த நிலையில் வெளிப்பட்டன.

மேலும் தற்போது அந்த இடத்தில் மழை நீர் கேசரிப்பு தடுப்பணை கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய போது பல தொன்மையான வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த பொருட்கள் புதைந்து கிடந்தது தெரியவந்தது. கருப்பு சிவப்பு நிற மண்பாண்டம், பளபளப்பான கருப்பு நிற மண்பாண்டம், உள்புறம் கருப்பு வெளிப்புறம் சிவப்பு நிற மண்பாண்டம், மண்ணாலான நீர் வடிகட்டி, விளையாட்டுப் பொருள்கள், பானைக்குள் கீழ் வைக்கப் பயன்படுத்திய பொருள்கள் கிடைத்துள்ளன. தற்போது உழக்குடி குளத்து அருகே மிகப்பெரிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தாழிகளை முறைப்படி மாநில தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கலியாவூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் நடந்த ‘எதிர்காலத் தொல்லியல் களங்கள் – உழக்குடி மற்றும் கலியாவூர்’ என்ற தலைப்பில் விளக்கவுரை வழங்கப்பட்ட போது தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பட்டய ஆய்வு மாணவரான மா.ஆறுமுக மாசான சுடலை கூறினார்.