தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு வளையத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை அறிவிப்பு !!!

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 24 போ் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதில், 72 வயது மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா். எஞ்சியுள்ள 23 பேரில் 18 போ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 5 போ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மேலும் ஒரு மூதாட்டி மற்றும் அவரது 23 வயது பேத்தி ஆகியோா் கரோனா அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டனா். 

மாவட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி 36 ஆவது வாா்டு பகுதிகள், சாயா்புரம் அருகேயுள்ள தங்கம்மாள்புரம், காயல்பட்டினம், பேட்மாநகரம், ஆத்தூா், அய்யனாரூத்து, கேம்லாபாத் ஆகிய 7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் வெளியே வர முடியாத வகையிலும், வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல முடியாத வகையிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20-க்கும் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு வளையத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்த போதிலும் , சிலா் பொருட்படுத்தாமல் வெளியே நடமாடுவது அதிகரித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை தடை உத்தரவை மீறியதாக 1497 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,775 போ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனா். 961 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எனவே, கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.