தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகம் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை இயங்காது – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கொரோனா பரவல் எதிரொலி தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகம் 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. தொற்று ஏற்பட கூடும் என்கிற காரணிகளை கண்டறிந்து அதனுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வரிசையில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் சிறப்பு கவனிப்பின் கீழ் இருந்து வருகிறது. செய்துங்கநல்லூர் பகுதியைசேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த மூன்று நாட்கள், தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகம் பணிகள் நிறுத்தப்பட்டு, சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது செய்துங்கநல்லூரில் குறிப்பிட்டபகுதி முழுவதுமாக லாக்டவுன் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் நேற்று மீன் பிடித்துறைமுக அறிவிப்பு பலகையில், ‘மாவட்ட நிர்வாக அறிவுப்பின்படி கொரோனா நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு 23.06.2020 முதல் 28.06.20202 வரை மீன்பிடித் துறைமுகம் இயங்காது என தெரிவிக்கப்படுகிறது’ என எழுதப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் வரும் 28-ம் தேதி வரை இயங்காது என தெரிய வந்திருக்கிறது.