நாளை முதல் ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிகளின் படி மீன் பிடித் தொழிலில் ஈடுபடலாம் என அனுமதி – தூத்துக்குடி

தூத்துக்குடியில் மீன்பிடி துறைமுகம் மறு உத்தரவு வரும் வரை இயங்காது என மீன் வளத்துறை அதிகாரிகள் துறைமுகத்தில் நேற்று அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்

தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரேஸ்புரம் பகுதி விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டது. மேலும் அந்த பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையும் தொடங்கியது.

இந்தநிலையில் இன்று மீன் பிடித்துறைமுகத்தில் கூடிய மீனவர்கள், ’’திடீரென இப்படி உத்தரவு போட்டால் எப்படி சமாளிக்க முடியும். ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த அனைத்தும் வீணாகும். மேலும் மறு உத்தரவு வரும் வரை தொழிலுக்கு போகக்கூடாது என்றால், அது வரை வாழ்வாதாரத்துக்கு என்ன வழி? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கிடையே படகு உரிமையாளர், தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள், காவல்த்துறை அதிகாரிகள், மீன் வளத்துறை இயக்குநர், இணை இயக்குநர் ஆகியோர் ஒன்று கூடி விவாதித்தனர்.

முடிவில் ‘கொரோனா பாதித்திருக்கும் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் மீன்பிடித்துறைமுகத்திற்கு வரக் கூடாது. பாஸ் வாங்கி வைத்திருக்கும் மற்ற பகுதியை சேர்ந்தவர்கள் வழக்கம்போல் மீன் பிடித்துறைமுகத்திற்குள் சென்று தொழிலில் ஈடுபடலாம். நாளை முதல் ஏற்கனவே விதிக்கப்பட்ட விதிகளின் படி மீன் பிடித் தொழிலில் ஈடுபடலாம் என அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. யாருக்கும் கொரோனா தொற்று வராதபடி பார்த்துக் கொள்ளவேண்டியது அனுமதி பெற்றவர்களின் பொறுப்பு’’ என பேசி முடிவு எடுக்கப்பட்டது.