தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. 1,723 பேர் கண்காணிப்பில் உள்ளன – ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 1,723 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய தனியாக குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் ஏற்கனவே பாதிக்கப்பட்ட 17 பேருடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 70 பேரையும், குறைந்த தொடர்பு கொண்டவர்கள் 158 பேரையும் கண்டறிந்து உள்ளனர். 70 பேருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 7 இடங்கள் 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தனியாக தொடர்பு எண்கள் அடங்கிய துண்டுபிரசுரம் அச்சடிக்கப்பட்டு வீடு, வீடாக வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த மக்கள் ஏதேனும் தேவைப்பட்டால், அந்த எண்களை தொடர்பு கொள்ளலாம். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.மாவட்டத்தில் வெளிநாடு சென்று வந்தவர்கள் 2 ஆயிரத்து 200 பேர் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இதில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட 762 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனால் தற்போது 1,723 பேர் மட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து 6 நாட்கள் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அதனை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகு மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2 நடமாடும் மருத்துவ குழுக்கள் அங்கு முகாம்கள் நடத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். 
இதனால் அங்குள்ள டாக்டர் மற்றும் நர்சுகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அடுத்த 5 நாட்கள் மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிக்கப்படும். அதன்பிறகு செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அத்தியாவசிய பணிகளுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 267 பேருக்கு இந்த பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. 2 ஆயிரத்து 245 தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். உப்பு ஏற்றுமதி செய்வதற்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் உரிய பாஸ் பெற்றுக்கொண்டு செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.