தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ் பி பொறுப்பேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்களுடன் காவல்துறை நல்லுறவுடன் செயல்படும் எனவும் புதிய எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ஜெயக்குமார் தெரிவித்தார்.

சாத்தான்குளத்தில் தந்தை, மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட இரண்டு சப் இன்ஸ்பெக்டர் , மற்றும் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் அந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைவரும் கூண்டோடு மாற்றப்பட்டு, காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு, விழுப்புரம் எஸ்பியாக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்,தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பி ஜெயக்குமார் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டத்தில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரச்சனைனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும், மக்களிடம் மனிதாபிமான முறையில் நடந்துகொள்ள காவல்துறைக்கு அறிவுரை வழங்கப்படும். பொதுமக்களுடன் காவல்துறை நல்லுறவுடன் செயல்படும்” என்று தெரிவித்தார்.

புதிய எஸ்பி ஜெயகுமார், விழுப்புரம் மாவட்ட மக்களிடம் நன் மதிப்பைப் பெற்றவர். ரவுடிகள் ஒழிப்பு நடவடிக்கையில் திறம்பட செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது.