60 நாட்களுக்கு பின் தூத்துக்குடி – சென்னை விமானப்போக்குவரத்து தொடக்கம்!!

கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் கீழ் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் தூத்துக்குடி-சென்னை இடையிலான விமான போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது.

சென்னையிலிருந்து வந்த இண்டிகோ விமானம் பகல் 12.40 மணி அளவில் தூத்துக்குடி வந்தடைந்தது. இதில் வந்த பயணிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்ட சுகாதார துறையினர் சார்பில் பயணிகளுக்கு கபசுர குடிநீர் பொடியை அதிகாரிகள் வழங்கினர்.

மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்துதல் இருக்கக்கோரி கைகளில் அழியாத மையை பயன்படுத்தி சீலிட்டு அனுப்பினர். இந்த பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி, கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசுகையில் சுமார் 60 நாட்களுக்கு பின்னர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. இதில் சென்னையிலிருந்து 68 பயணிகள் வந்துள்ளனர்.

தற்சமயம் மே 31-ஆம் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே விமான போக்குவரத்து நடைபெறும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி முதல் விமான பயண திட்டமானது மாறுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.