கண்மாயில் இருந்து சரள் மண் அள்ளிச் சென்ற டிராக்டர் சிறைபிடிப்பு

கோவில்பட்டி அருகே கண்மாயில் இருந்து சரள் மண்ணை அள்ளிச் சென்ற டிராக்டர் மற்றும் அள்ளப் பயன்படுத்தப்பட்ட ஜேசிபி வாகனத்தை கெச்சிலாபுரம் பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கயத்தாறு வட்டத்திற்கு உள்பட்டது காலாங்கரைப்பட்டி ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உள்பட்ட கெச்சிலாபுரத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கு கரம்பை மண்ணை அள்ளுவதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்றிருந்தாராம்.
இந்நிலை்யில், கெச்சிலாபுரம் கண்மாயில் இருந்து சரள் மண்ணை அள்ளிச் சென்ற டிராக்டரை அப்பகுதி பொதுமக்கள் மறித்தனர். மேலும், சரள் மண்ணை அள்ளப் பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி. இயந்திரத்தையும் அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்தவுடன் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல் துறையினர் அனுமதிச்சீட்டுபடி விவசாயப் பயன்பாட்டிற்கு கரம்பை மண் மட்டுமே எடுக்க வேண்டும், சரள் மண் எடுப்பது வரம்பை மீறிய செயல் எனக் கூறியதையடுத்து டிராக்டர் திருப்பி அனுப்பப்பட்டது. அதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.