இன்றைய சிந்தனை

மொய் பணம் ஒற்றைப்படையில் வைப்பதற்கு இதுவா காரணம்?

ஏதாவது ஒரு விசேஷங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது மொய் பணம் தான். திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழா, பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி நம் வீட்டில் வைக்கும் விசேஷங்கள் என்றாலே சிறப்பு. விசேஷத்திற்காக வரும் சொந்த பந்தங்களும், அவர்கள் வைக்கும் மொய்ப் பணத்தோடு சேர்த்து தாய்மாமன் சீரு, அத்தை சீரு, பங்காளிகள் சீரு இவைகள் எல்லாமும் மிகச்சிறப்பு. நம்முடைய சாஸ்திர சம்பிரதாயங்கள் என்றாலே அதற்கு தனி மரியாதை தான். ஒரு பண்டிகை, ஒரு விசேஷம் என்று வந்தால் தமிழ் கலாச்சாரத்திற்கு ஈடு இணை வேறு எதிலும் இல்லை என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதிலும் நம் முன்னோர்கள் எல்லாவற்றிற்கும் ஒரு முறையை நமக்காக வகுத்து வைத்துள்ளார்கள். இந்த மொய் பணத்தை ஒற்றை படையில் வைப்பதற்கு ஒரு காரணத்தை கூறியுள்ளார்கள் பாருங்களேன்! 101, 501, 1001 இந்த 1 ரூபாய்க்குள் அப்படி என்ன தான் அடங்கியுள்ளது என்று நாமும் தெரிந்து கொள்வோமா?

இரட்டைப்படை என்னை எளிதாக வகுத்து, இரண்டாக பிரித்து விடலாம். அதில் மீதம் எதுவுமே வராது. மீதம் என்றால், நமக்கு கிடைப்பது பூஜ்ஜியமாக அல்லது ஒரு முழு என்னதான் கிடைக்கும். ஆனால் ஒற்றைப்படை என்னை வகுத்தால் கண்டிப்பாக பூஜ்ஜியம் என்று முழுமை பெறாது. அதில் மீதம் கண்டிப்பாக .5 என்ற விடை வரும். எடுத்துக்காட்டாக 100/2=50 _ 101/2=50.5 மீதம் வருகிறதா?

 
உங்களுக்கு புரிந்ததா? நம் உறவினருக்கு இரட்டைப்படையில் மொய் வைத்தால், மொய்ப்பணம் வைப்பதற்கும், வாங்குபவருக்கும் (உனக்கும் எனக்கும்) இடையே இனி மிச்சம் மீதி எதுவும் இல்லை என்று அர்த்தமாகி விடுமாம். இதோடு நம் உறவு மீதி இல்லாமல் முடிந்து விட்டது. அதாவது பூஜ்ஜியம்.

அதுவே ஒற்றைப்படையில் மொய் வைத்தால் நம்முடைய உறவு முடிந்து போகவில்லை இன்னும் மீதி இருக்கின்றது. இந்த பந்தம் என்றுமே தொடரும் என்பதை குறிக்கின்றது. இது ஒரு சின்ன விஷயம் தான். பார்க்கப்போனால் ஒரு மூட நம்பிக்கை என்று கூட சொல்லலாம். ஆனால் நம் முன்னோர்கள் கூறியதை இல்லை என்று மறுக்க முடியுமா? இந்த ஒற்றைப்படை மொய் பணத்திற்கு இவ்வளவு அருமையான விளக்கத்தைக் கூறிய நம் முன்னோர்களை நினைக்கும்போது புல்லரிக்க தான் செய்கின்றது.

ஒரு பழக்கமானது நல்லதையும், ஒற்றுமையையும் உறவுக்கு இடையே பலப்படுத்துகிறது என்றால் அதை நாம் எதற்காக மறுக்க வேண்டும். நல்லதை பின்பற்றினால் என்னதான் தவறு. இனி உங்களுடைய உறவினருக்கு மொய் வைப்பதாக இருந்தால், கட்டாயம் ஒற்றைப்படையில் மொய் வையுங்கள். இப்படி மொய் வைப்பதற்கு இதுதான் அர்த்தம் என்பதை உங்களது பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்கள். நம் முன்னோர்கள் பின்பற்றிய பழக்க வழக்கத்தை தயவு செய்து மாற்றிக் கொள்ள வேண்டாம். இதில் அடங்கியிருக்கும் கருத்துக்களும் நன்மைகளும் ஏராளம். வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் உறவுகளுக்கும் உறவினர்களுக்கும் எவ்வளவு முன்னுரிமை உள்ளது என்பதை நாம் மறந்து வந்துக் கொண்டிருக்கின்றோம். உறவுகளை எல்லாம் வலுப்படுத்த வேண்டும் என்றால் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் அவசியம் நமக்கு தேவை. உறவு பிரியக் கூடாது என்று ஒற்றைப்படையில் மொய் வைத்து கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே மனிதர்கள் மகா அந்தஸ்தை அடைந்து விடுவார்கள்.