இன்றைய சிந்தனை

தெளிந்த சிந்தனையோடு …

தெளிவான சிந்தனை இல்லாதவன் தன் ஆற்றலை உணர முடியாது.வாழ்வில் வெற்றி பெற முடியாது.

மற்றவர் முன்னேற்றத்தைக் காணும் போது பொறாமை அவனிடம் உருவாகும். அவர்கள் தவறான வழியில் பதவியைப் பிடித்து விட்டதாகவும், பணத்தைச் சேர்த்து விட்டதாகவும் பேசிக் கொண்டு இருப்பான்.

ஒருவனிடம் பொறாமை சேரும் போது வெறுப்புணர்வு பகையுணர்வு ஆகியவை அவனை அண்டிக் கொள்ளும். பிறரை விமர்சனம் செய்வதில் காலத்தைக் கழித்துக் கொண்டு இருப்பான். 

தன் முன்னேற்றத்தைத் தானே தடுத்து நிறுத்தி விடுவான். மூடிய மனமுடையவன் காரியங்களை பிறர் கோணத்தில் இருந்து பரிசீலிப்பதில்லை தான். பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிக்கின்றான்.

நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க விரும்பினால் மனதைத் திறந்து விட்டு புதிய கருத்துக்களையும் புதிய வாய்ப்புக்களையும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பரிசிலிக்க வேண்டும்.

நமக்கு முன்னர் வாழ்ந்த மேதைகள் புதிய கருத்துக்களைச் சொல்லி விட்டு மூடிய மனம் பெற்றவர்களால் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல

மாபெரும் வெற்றி பெற விரும்பும் நீங்கள் திறந்த மனதுடன் புதிய கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டும். 

“குதிரையோ, மாடோ இழுக்காமல் தானே நகரும் வாகனத்தைச் செய்வேன்” என்று ஹென்றி போர்டு முதன் முதலில் சொன்ன போது கேலி பேசப்பட்டார்.

காற்றில் உள்ள ஈதர் ஒலி அலைகளைத் தாங்கிச் செல்லக் கூடியது. அதன் உதவியால் ஓரிடத்தில் பேசுவதை ஒலியலைகளாக மாற்றி பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் மீண்டும் பேச்சாக மாற்றிக் கேட்க முடியும் என்று மார்க்கோணி சொன்ன போது அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டினார்கள்.

ராக்கெட் விண்கலங்களை உருவாக்கி மனிதனைச் சந்திரனில் கொண்டு போய் இறக்க முடியும் என்று அறிவியல் அறிஞர்கள் முதன் முதலில் சொன்ன போது சாத்தியமே இல்லாத அதீத ஆசை என்று கடிந்து கொள்ளப்பட்டார்கள்.

ஆகவே திறந்த மனம் உங்களிடம் இல்லை என்றால் தெளிவான சிந்தனையை நீங்கள் பெற முடியாது.

தெளிவான சிந்தனை இல்லாதவன் தன் ஆற்றலை உணர முடியாது. ஊக்கம் கொள்ள முடியாது. வாழ்வில் வெற்றி பெற முடியாது.

ஆம்.,நண்பர்களே..

தெளிந்த சிந்தனையோடு செயற்படுபவர்க்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதால் அவ்வெற்றிக்கு வழி வகுக்கும் அதிமுக்கியமான சில செய்திகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

திறந்த மனம் இல்லாதவரிடம் தெளிந்த சிந்தனை பிறப்பதில்லை. 

விருப்பு வெறுப்புடன் மதிப்பீடுகளைச் செய்வதனால் சரியான முடிவுகளுக்கு வர முடிவதில்லை. அனுபவங்களைத் திறந்த மனதுடன் ஆராயுங்கள். தெளிந்த சிந்தனை அமையும். வெற்றிக்கு இதுவும் ஒரு இரகசியம்.