சிந்தனைகள்

“அடுத்தவர்களுக்கும் நம்மைப் போல..”

நாம் நமது வாழ்க்கையை மட்டுமே ஆழ்ந்து அறிந்து இருக்கிறோம். ஆனால் அடுத்தவர்களின் வாழ்க்கையை நாம் காண்பது ஒரு மேலோட்டமாகத் தான்..,

ஒருமுறையேனும் மற்றவர் எதிர்கொள்ளும் சந்தர்ப்ப சூழ்நிலையைப் புரிய முயற்சிப்பதே இல்லை.

எப்போது திருமணம்? இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறீங்களா? கல்யாணத்திற்கு சொல்லியும் ஏன் வரவில்லை? சாவுக்கு சொல்லி அனுப்பியும் வரவில்லை ?

ஏன் தொலைபேசி பண்றதில்லை?,இத்தனை வருடமாகக் கவிதை எழுதுகின்ற நீங்கள் இன்னுமா ஒரு நூல் கூட வெளியிடவில்லை ?. இப்படி ஆயிரம் ஆயிரம் வினாக்கள், விடைகள் அங்கலாய்ப்புகள்.

மற்றவர்களின் தோற்றத்தை எடை போட்டே பழக்கப்பட்ட நாம் ஒரு முறையும், அவர்கள் நிலையிலிருந்து அவர்களை எடை போடவும் முனைந்தது இல்லை..

மற்றவர் வாழும் சூழ்நிலைகள் நாம் கடந்து வந்த அதே பாதைகளில் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்..

மாணவி அமுதா இன்றும் பள்ளிக்கூடம் வரவில்லை. குறிப்பாய்த் தேடும் அளவிற்கு அமுதா ஒன்றும் மற்ற பிள்ளைகளைப் போல கெட்டிக்காரியோ இல்லை..

பக்கத்து கிராமத்தில் இருந்து ,சரி வர எண்ணைய் தேய்க்காமல் அவசர அவசரமாய் பின்னப்பட்ட தலையுடன் அரசு கொடுக்கும் சீருடையை சரியாகத் துவைக்காமல் போட்டு வருபவள் தான் அமுதா என்னும் மாணவி..

அவளது தோற்றத்தினால் ஏற்பட்ட அவமதிப்பு கடந்த மூன்று வாரமாக நேரம் கழித்து அவள் பள்ளிக்கு வந்ததால் இன்னும் வலுவடைந்திருந்தது.

ஒவ்வொரு நாளும் வகுப்பாசிரியரால் முட்டி போட வைத்ததால் இன்னும் பிரபல்யம் அடைந்திருந்தாள் என்றும் சொல்லலாம்…
.
இன்றுடன் ஐந்தாவது நாளாகப் பள்ளிக்கு வரவில்லை. தொடர்ந்து அவளுக்குக் கொடுத்த தண்டனைகளின் அவமானங்கள் அவளை பள்ளிக்கு வரவில்லை என்று எண்ணினார்கள்..

திங்கட்கிழமை எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் நேரத்துடனே பள்ளிக்கு வந்து வகுப்பு அறையில் உட்கார்ந்து இருந்தாள்.

கடந்த ஒரு வார காலமாக பள்ளிக்கு வராமல் தற்போது வந்ததால் ஆசிரியரால் உற்சாகம் அளிக்கப்பட்டு பாடத்தில் இணைந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டாள்.

பாடம் நடத்திக் கொண்டு இருந்த போது அந்த வகுப்பு ஆசிரியரிடம் ” சார் கொஞ்சம் உங்களுடன் பேச வேண்டுமென அனுமதி கேட்டாள்.ஆசிரியர்
அனுமதி அளித்தார்..

“சார்..எனக்கு அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கச்சி என்று யாரும் இல்லை.நானும் அம்மாவும் மட்டும் தான்.

மூன்று வாரங்களுக்கு முன் அம்மா உடம்பு சரி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

ஒவ்வொரு நாள் காலையிலும் அவருக்கான காலை,மதிய, சாப்பாடு தயார் செய்து காலையில் பள்ளிக்கூடம் வரும் வழியில் மருத்துவமனையில் அவரிடம் கொடுத்து விட்டு வருவேன்.

கடந்த வாரம் உடல் நிலை மோசம் அடைந்து  என் அம்மா இறந்து போய் விட்டார் வியாழக்கிழமை அடக்கம் செய்தோம். அதனால் கடந்த வாரம் பள்ளிக்கு வர முடியவில்லை.

இன்னைக்கு அவருக்கென சாப்பாடு தயார் செய்வதோ மருத்துவமனைக்குப் போகும் தேவையோ இனி இல்லை..

அதனால் நேர காலத்துடன் வர முடிந்தது. இனிமேல் தாமதமாக வர மாட்டேன் என சொல்லிவிட்டு சாதாரணமாக அவள்அமர்ந்தாள்.

வகுப்பறையில் சில விசும்பல் சத்தங்கள் மட்டும் கேட்டப்படி அமைதி,,,,

ஆம்.,நண்பர்களே..

இப்படித் தான் நாமும் அவசரமாய் மற்றவரை எடை போட்டு விடுகிறோம். அவர்களது சூழ்நிலையைக் கருத்தில் கொள்வதே இல்லை..

காணும் காட்சிகளை வைத்து மற்றவர்களை எடை போடாமல், அடுத்தவர்களுக்கும் நம்மைப் போல ஆயிரம் தொல்லைகள்,தொந்தரவுகள் இருக்கும் என்பதை உணர வேண்டும்.