தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சிறந்த கல்லூரியாக தேர்வு – இந்திய அளவில் 10 -ல் ஒன்று

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி பொருளாதாரம் மற்றும் மிகக்குறைந்த கட்டண கட்டமைப்பில் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் சிறந்த கல்லூரி எது–? என்பது தொடர்பாக பிரபலமான தனியார் நிறுவனம் கடந்த 22ஆண்டுகளாக கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் இந்த ஆண்டும் இது தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்தியா முழுவதும் சுமார் 1302 கல்லூரிகள் இந்த ஆய்வில் பங்கேற்றன. கணக்கெடுப்பின் முடிவில் பொருளாதாரம் மற்றும் மிகக்குறைந்த கட்டண கட்டமைப்பில் இந்தியாவிலுள்ள சிறந்த 10கல்லூரிகளில் ஒன்றாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வ.உ.சிதம்பரம் கல்லூரி அறிவியலில் 67வது இடத்தையும், கலைகளில் 90வது இடத்தையும், வணிக நிர்வாகவியலில் 89வது இடத்தையும், வணிகவியலில் 95வது இடத்தையும் பெற்றுள்ளது. வணிக நிர்வாகவியல் பிரிவில் மிகக்குறைந்த படிப்புக் கட்டணத்தால் தரவரிசையில் முதலாவது இடத்தையும், இதே பிரிவில் சிறந்த மதிப்புள்ள கல்லூரி தரவரிசையில் 2வது இடத்தையும் பெற்றுள்ளது.

அறிவியல் பிரிவில் மிகக்குறைந்த படிப்புக் கட்டணத்தால் தரவரிசையில் 3வது இடத்தையும், வணிகவியல் பிரிவில் மிகக்குறைந்த படிப்புக் கட்டணத்தால் தரவரிசையில் 5வது இடத்தையும், சிறந்த மதிப்புள்ள கல்லூரி தரவரிசையில் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.