மக்களின் மனதை வென்ற தூத்துக்குடி அணி!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் மாநில அளவிலான குடியரசு தின, பாரதியார் தின கடற்கரை கைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையின் சார்பாக தருவைக்குளம், கடற்கரையில் கடந்த 30.01.2020 முதல் 31.01.2020 வரை நடைபெற்றது. போட்டிகளை, தமிழக பள்ளிக்கல்விதுறை இணை இயக்குநர் (என்.எஸ்.எஸ்) திரு.வாசு அவர்கள் துவங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் திரு.பால்சாமி, திருமதி.வசந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடத்தை அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டச்சேரி, நாகப்பட்டினம் மாணவர்கள் கிளிண்டன்-விக்னேஷ் ஜோடி பெற்றுள்ளார்கள் இரண்டாம் இடத்தை கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகேஷ்-கிருஷ்ணராஜ் ஜோடி பெற்றுள்ளார்கள். மூன்றாம் இடத்தை ரைஸ்சிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆடுதுறை, தஞ்சாவூர் மாணவர்கள் முகமது-ஈஸ்வானுதின் ஜோடி பெற்றுள்ளார்கள்.

தூத்துக்குடி vs நாகப்பட்டினம்

நமது கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முகேஷ்-கிருஷ்ணராஜ் ஜோடி கடைசி வரை அணியின் வெற்றிக்காக போராடினார்கள். அரைஇறுதி போட்டியில் ஏற்பட்ட தசைபுடிப்பின் மூலம் அவதிப்பட்ட கிருஷ்ணராஜ் 1-0 என்ற செட் கணக்கில் தனது அணியை முன்னோக்கி நகர்த்தினார். இரண்டாவது செட்டில் வலி அதிகமானதால் தொடர்ந்து அவதிப்பட்டார்.அதனை தொடர்ந்து நாகப்பட்டினம் அணி 2-1 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை தன் வசம் படுத்திக்கொண்டது. கிருஷ்ணராஜ் ஆட்டம் மற்றும் அந்த வலியின் மூலம் தனது அணிக்காக போராடியது பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அவருக்கு பக்க பலமாக முகேஷ்-யும் தனது பங்களிப்பை கொடுத்தது கூடுதல் பலம்.