விதிகளை மீறுவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவர் : தூ.டி டிஎஸ்பி பிரகாஷ்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியா முழுவதும் வரும் 14 ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என காவல்துறையினர், ஆட்சியர், என அரசு அதிகாரிகள் எச்சரித்த போதிலும் பொதுமக்களில் சிலர் அநாவசியமாக வெளியே வந்து கொண்டு தான் இருக்கின்றனர். இது குறித்து காவல்துறையினர் கேள்வி கேட்டால் பெரும்பாலும் மருந்து, மாத்திரை வாங்க செல்வதாகவும் மார்க்கெட் செல்வதாகவும் கூறி வருகின்றனர். 

பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி இன்று காலை முதலே தூத்துக்குடி 3 ம் கேட் மேம்பாலம் அருகே சாலையை பேரிகார்டுகள் மூலம் அடைத்து அவ்வழியே வருவோர் போவோரை நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டனர். இதில் தேவையின்றி சுற்றியவர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது. அது போல் 4ம் கேட் பகுதியும் முழுமையாக அடைக்கப்பட்டு தேவையின்றி வெளியே வந்தவர்கள் எச்சரித்து அனுப்பபட்டனர். 
வழக்கமாக மாலையில் கடும் வாகன சோதனை இருந்த நிலையில் தற்போது காலையிலும் போலீசார் கிடுக்கிப்பிடி சோதனை நடத்தி வருகின்றனர். ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவோர் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் வாங்க வேண்டும். நாளை முதல் காலை , மாலை என அனைத்து நேரங்களிலும் தீவிர சோதனை நடத்தப்படும். விதிகளை மீறுவோர் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவார்கள் . அத்தியாவசிய பணிக்கு வெளியே செல்வோர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டுமென டிஎஸ்பி பிரகாஷ் தெரிவித்தார்.