கொரானா தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு : காயல்பட்டினம் நகராட்சி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரானா தடுப்பு பணிகளையும் மற்றும் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் நகராட்சிக்கு உட்பட்ட குத்துக்கல்தெரு, சதுக்கை தெரு ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகளையும் மற்றும் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று (02.07.2020) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து காயல்பட்டணம் அரசு மருத்துவமனையில் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக வைக்கப்பட்டுள்ள படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள எந்த ஒரு நபரும் விடுபடாத வகையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக சளி, காய்ச்சல், இரும்பல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களின் விபரங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்தாவது: தமிழக அரசின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நேற்றைய தினம் செய்தி மற்றம் விளம்பரத்துறை அமைச்சரால் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு காய்ச்சல் முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா தொற்று பரிசோதனை செய்ய முடியும்.

கொரோனா தொற்று உறுதியான நபர்களை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். மேலும் தமிழக அரசின் உத்தரவுப்படி நோய் கட்டுப்பாட்டு பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காயல்பட்டணம் நகராட்சிக்கு உட்பட்ட குத்துக்கல்தெரு, சதுக்கை தெரு ஆகிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் நகராட்சி பணியாளர்களால் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி, இரும்பல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களை பரிசோதனை செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை இன்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தபடி, பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே வீட்டில் இருந்து வெளி வர வேண்டும்.

வீட்டில் இருந்து வெளி வரும்போது கட்டாயமாக முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். ஆய்வில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, காயல்பட்டணம் நகராட்சி ஆணையர் புஷ்பலதா, திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ், துணை வட்டாட்சியர் கோபால், வட்டார மருத்துவ அலுவலர் அஜய், சுகாதார ஆய்வாளர் குருசாமி, காயல்பட்டணம் அரசு மருத்துவமனை மருத்துவர் ராணி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.