சாத்தான்குளம் விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிக்கை வெளியீடு

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலைய விசாரணைக்கு பின் நீதிமன்றக் காவலில் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1. அவர்களின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து இன்று (ஜூன் 24) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின் போது, நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழக்கு குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும், பிரேத விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையை 3 மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் மேற்கொள்ள வேண்டும் எனவும், இதனை முழுமையாக வீடியோ பதிவு செய்து அதன் அறிக்கைகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, இவ்வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்து, மனுவை 26.06.2020க்கு ஒத்திவைத்தனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1 அவர்கள் பிரேத புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், இவ்வழக்கினை மாண்பமை உயர்நீதிமன்ற மதுரை கிளை முழுமையாக கண்காணித்து வருகிறது என்பதையும், இதுகுறித்து பொதுமக்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும், எவ்வித சந்தேகமோ, அச்சமோ கொள்ள தேவையில்லை என்பதையும், இறுதி சடங்கின்போது கொரோனா ஊரடங்கு விதிமுறைகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளது. .

தமிழ்நாடு முதலமைச்சர், இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் பேரிலும் மற்றும் மாண்பமை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இதுதொடர்பாக பிறப்பிக்க உள்ள உத்தரவின் அடிப்படையிலும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

மேலும், உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
தற்போது கொரோனா தொற்று நோய் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் இருவரின் இறுதிச்சடங்கில் விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் குறிப்பிட்ட அளவில் மட்டுமே பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும். கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.