முன்மாதிரியான கலெக்டர் என அடையாளம் காட்டப்படும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், 130 கோடிக்கும் மேலான மக்கள் தொகைக் கொண்ட இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில், கொரோனாவின் பாதிப்பு பெரிய அளவில் இல்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. சரியான நேரத்தில், இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, மத்திய அரசு எடுத்த சுகாதார நடவடிக்கைகள்தான். இதனை உலக சுகாதார அமைப்பு பாராட்டிக் கொண்டிருக்கிறது. 

இதற்கிடையில், இந்தியா எப்படி இப்படியொரு நோய் கட்டுப்பாட்டை மிக நேர்த்தியாக செய்து முடித்தது? என்பது குறித்து, இந்திய பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிக்கை அளித்திருக்கிறார். அதில் இந்தியாவின் 29 மாநிலங்களிலும் கொரோனாவை கட்டுப்படுத்த, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பல்வேறு மாவட்டக் கலெக்டர்கள் மூலம் எடுத்த நடவடிக்கைகளெல்லாம் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

அதில், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் ஒரு மாவட்டத்தின் கலெக்டர் மேற்கொண்ட சிறப்பான பணிகள் மேற்கோளாக காட்டப்பட்டு, அவரின் முன்மாதிரியான செயல்பாடுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் தமிழகத்தைப் பொறுத்த வரை, தூத்துக்குடி மாவட்டக் கலெக்டர் சந்தீப் நந்தூரியின் செயல்பாடு, முன்மாதிரியானதாக காட்டப்பட்டிருக்கிறது. அவர் கொரோனா நோயை, தூத்துக்குடி மாவட்டத்தில் முழுமையாகக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், திட்டங்கள் குறித்தெல்லாம் மிக விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில், உலக சுகாதார அமைப்புக்கு சுட்டிக்காட்டப்படும் கலெக்டர்கள் வரிசையில், தமிழகத்தில் இருந்து முன்மாதிரியான கலெக்டர் என அடையாளம் காட்டப்பட்டிருக்கும் சந்தீப் நந்தூரிக்கு அதிகாரிகள் மத்திலும், பொதுமக்கள் தரப்பிலும் பாராட்டுகள் குவிகின்றன.