உட்கட்சி பூசல், வாரிசு அரசியலால் மக்களிடையே திமுக வருங்காலத்தில் வலுஇழந்து விடும் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை, பெருமாள் கோவில் கல் மண்டப பணிக்கு அடிக்கல் நாட்டுதல், கிராம மக்கள் சந்திப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் இன்று தூத்துக்குடிக்கு வந்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக சேர்ந்து வருகின்றனர். மத்திய அரசின் பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் அதிகமாக பயன் பெற்றது தமிழக மக்கள் தான். அந்த அளவிற்கு மத்திய அரசு திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளன. இதற்கு முன்னர் இருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எல்லா செயல்பாடுகளும் ஆமை வேகத்தில் நடைபெற்றது. ஆனால் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு அரசின் அனைத்து செயல்பாடுகளும் மிக விரைவாக முடிக்கப்படுகிறது.
வேலூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் வருவதற்குக் காரணமே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தான். தென் தமிழகத்தில் திமுக கட்சியின் உட்கட்சி பூசலால் கொலைகள் அடுத்தடுத்து அரங்கேறி உள்ளது. தூத்துக்குடியில் குடிநீர் பிரச்சனை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதனை உடனே சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அணை பாதுகாப்பு மசோதா, முத்தலாக் மசோதா உள்பட எந்த நலச்சட்ட மசோதாக்களை கொண்டு வந்தாலும் அதை தடுக்க வேண்டும் என்றே திமுகவினர் நினைத்துக் கொண்டுள்ளனர். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறை சரி செய்ய அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் பிரச்சினைக்கு உள்ளாட்சி அமைப்புகள் இல்லாதது முக்கியகாரணம். எனவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த அரசு முயற்சி செய்ய வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி கட்சியில் இருந்தாலும் அதிமுக அரசின் நன்மைகளை பாராட்டவும், மக்கள் கோரிக்கைகளை நடைமுறை படுத்தாமலிருந்தால் அதை சுட்டிக்காட்டவும் பாஜக தயங்காது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபொழுது நாட்டுக்காக எந்த நல்லதையும் அவர்கள் செய்யவில்லை. திமுகவில் வாரிசு அரசியலுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. திமுகவில் இன்று உதயநிதி வாரிசு அரசியல் தொடங்கியுள்ளார். அரசியலில் உதயநிதிக்கு என்ன அனுபவம் இருக்கிறதென்று அவர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வருகிறார்?. ஆகவே உட்கட்சி பூசல் மற்றும் வாரிசு அரசியலால் திமுக மக்களிடையே வருங்காலத்தில் வலு இழந்து விடும். பயங்கரவாத தடுப்பு மசோதா என்பது பயங்கரவாதிகளுக்கு அதை நினைத்து காங்கிரஸ்காரர்கள் பயப்பட தேவையில்லை என்றார்.