தூத்துக்குடி சிவன் கோயிலில் தெப்பத் திருவிழா

தைப்பூசத்தை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில் என்று அழைக்கப்படும் சிவன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி  கோயிலில்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து,  அருள்மிகு சங்கர ராமேஸ்வரர், அன்னை பாகம்பிரியாள், விநாயகர் சுவாமிகள் நான்கு ரத வீதிகள் வழியாக வீதி உலா சென்று தெப்பகுளத்தில் உள்ள சுந்தரபாண்டிய விநாயகர் கோயிலை அடைந்தனர். 

அங்கு கணபதி ஹோமம், கும்ப பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.  இதைத்தொடர்ந்து பின்னர் இரவு அலங்கரிங்கப்பட்ட தெப்பத் தேரில், சங்கர ராமேஸ்வரர், அன்னை பாகம்பிரியாள், விநாயகர் எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  பின்னர் சுவாமிகள் 4 ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் சிவன் கோயிலை சென்றடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.