கடவுள் வீடியோ எடுக்கச் சொன்னார் எடுத்தேன்”- வாலிபர்கள் கைது – தூத்துக்குடி

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரியில் விண்வெளி விளக்க கண்காட்சி வரும் அக்டோபர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், ராக்கெட், கோள்கள், நட்சத்திரங்கள் ஆகியவற்றை பூமியிலிருந்து பார்க்கும் படியான தொலைநோக்கி மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கண்காட்சி நடைபெற உள்ள கல்லூரிக்குள் நுழைந்து கட்டிடங்களை பல கோணங்களில் இரண்டு பேர் வீடியோ எடுத்துள்ளனர். அவர்களை விசாரித்த போது சந்தேகம் வந்ததால் கல்லூரியின் முதல்வர், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீஸார்கள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜாபர் அலி மற்றும் ரஷிக் அகமது என தெரியவந்தது. அவர்களை விசாரித்த போது “என் கனவில் கடவுள் தோன்றி விண்வெளி விளக்க கண்காட்சி நடைபெறும் இந்தக் கல்லூரியை வீடியோ எடுக்கச் சொன்னார். அதனாலதான் எடுத்தேன்” என இருவரும் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்தே போனார்கள். போலீஸார், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், டவுண் டி.எஸ்.பி, எஸ்.பி., மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி உட்பட பலர் விசாரித்தும் சென்ன பதிலையே இருவரும் மீண்டும் மீண்டும் கூறியுள்ளனர். அவர்களிடமிருந்து உருப்படியான தகவல்கள் ஏதும் கிடைக்காததால் திணறிய போலீஸார், 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தூத்துக்குடி குற்றவியல் 3வது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.