சாலை விதி மீறல் அபராதம் வெறும் 100 ரூபாய் செலுத்தினால் போதும் : காவலர் சுனில் சந்து – ஹரியானா

புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி சாலை விதிகளை மீறுபவர்களுக்கு 10 மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதமாக தற்போது ரூ.5,000 விதிக்கப்படுகிறது . இதேபோன்று ஒவ்வொரு விதிமீறலை பொறுத்தும் ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இந்த புதிய சட்டத்தினால் வாகன ஓட்டிகள் அதிர்ந்து போயுள்ளனர், காவலர்களிடமிருந்து தப்பிக்க அவர்கள் செய்யும் விஷயங்கள் வைரலாகி வருகிறது.மேலும், இதை குறைக்க பல மாநில அரசுகளும் ஆலோசனை நடத்திவருகின்றன.

இந்த நிலையில், ஹரியானாவைச் சேர்ந்த சுனில் சந்து என்ற காவலர் “மொத்த தொகையும் செலுத்தாமல் வெறும் 100 ரூபாய் செலுத்தினால் போதும்” என அவர் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காவலர் சுனில் சந்து

அந்த வீடியோவில்,
“காவலர்கள் கேட்கும் மொத்தப் பணத்தையும் தர வேண்டிய அவசியம் இல்லை. வெறும் 100 ரூபாய் மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும், அதற்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இடம் உள்ளது. லைசென்ஸ், இன்ஷூரன்ஸ் போன்ற ஆவணங்களை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தால், செலான் கொடுத்த அந்தக் காவல் நிலையத்துக்கு நேரில் சென்று நம்மிடம் உள்ள ஒரிஜினல் ஆவணத்தை அதிகாரிகளிடம் காட்டி 100 ரூபாய் மட்டும் அளிக்கலாம். செலான் அளித்த 15 நாள்களுக்குள் ஒரிஜினல் ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்ட வேண்டும்.

மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் வருவது போன்ற குற்றங்களுக்கு இது பொருந்தாது. இதன் மூலம் வாகன ஓட்டிகளின் பணம் சேமிக்கப்படும்” எனப் பேசியுள்ளார். சுனில் சந்து பேசியுள்ள வீடியோவை இதுவரை ஏழு லட்சம் பேர் இணையத்தில் பார்த்துள்ளனர். இதனால் அவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும் குவிந்துவருகிறது.

இது குறித்து போக்குவரத்துக் கூடுதல் துணை கமிஷனர் கோபாலை தொடர்புகொண்டு பேசினோம், “புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் தமிழகத்தில் நடைமுறைக்கு வரவில்லை. இங்கு பழைய சட்டமே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் இங்கு சாலைவிதிகளை மீறுபவர்களுக்கு ரசீது வழங்கப்படும். அவர்கள் தபால் நிலையம், கார்டு, ஆன்லைன் போன்றவற்றில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். எந்தக் காவலரேனும் கையில் பணம் வாங்கினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு விதித்துள்ள இந்தப் புதிய சட்டத்தின் அபராதத்தை மாநில அரசுகள் மாற்றியமைத்து வருவதாக கூறப்படுகிறது. ஒரிஜினல் லைசென்ஸை காவல்நிலையத்தில் காட்டி ரூ.100 செலுத்தும் முறை வடமாநிலங்களில் நடைமுறையில் இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை” என நிதானமாகக் கூறினார்.