எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் : திரைப்பட இயக்குனர் கௌதமன்

தூத்துக்குடியில், விவிடி சிக்னல் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இன்று முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் தூத்துக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன், திரைப்பட இயக்குனர் கௌதமன், மற்றும் தமிழ் மைய நிறுவனர் ஜெகத் கஸ்பர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் கௌதமன் செய்தியாளர்களை சந்தித்து, இதுவரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 மாநிலங்கள் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் உடனடியாக ஒரு தனித் தீர்மானம் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்றார். தமிழ்நாடு அரசு குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றினால் ஆட்சியை கலைப்போம் என்று சொன்ன எச்.ராஜாவை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும், எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.